நான் வெற்றி அடைந்தே தீருவேன்~Abdual Kalam

நான் வெற்றி அடைந்தே தீருவேன்

விளக்காயிரு, படகாயிரு, ஏணியாயிரு
துன்பத்தை துடைப்பவனாயிரு,
வழி நடத்தும் துணையாயிரு.

அன்பு நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு தமிழக மக்களின் உள்ளங்களில் குடியிருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் இல்லத்தில், அவரது விருப்பப் படி பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோருக்கான பள்ளிக்கு வந்து உங்களை எல்லாம் சந்தித்து உரையாட கிடைத்த வாய்ப்புக்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியின் 23வது ஆண்டு விழா மற்றும் எம்.ஜி.ஆர் 95 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். 23 ம் ஆண்டு கண்ட பள்ளி விழா என்றால் என்ன. இந்த பள்ளி பூமியில் உள்ளது. பூமி சுரியனை சுற்ற ஒரு வருடம் ஆகும். எனவே இந்த பள்ளி 23 முறை சுரியனை சுற்றி விட்டது என்று அர்த்தம். கடந்த 23 வருடங்களில், இது வரை 3000 பேச்சு மற்றும் செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கு கல்வி கொடுத்து, நம்பிக்கை கொடுத்து, அவர்களுக்கு மேல் படிப்பு கொடுத்து அவர்களது வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றி வைத்திருக்கிறது. எனவே 23 வது ஆண்டு விழா கொண்டாடும் இப்பள்ளிக்கு எனது வாழ்த்துக்கள். இன்றைக்கு உங்கள் மத்தியில் நான் வெற்றி அடைந்தே தீருவேன் என்ற தலைப்பில் உரையாட இருக்கிறேன்.

கொடு, கொடு, கொடுத்துக்கொண்டே இரு

நண்பர்களே, எம்.ஜி.ஆர் அவர்களைப்பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும், ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். ஏழையாய் வாழ்ந்து, உழைப்பால் உயர்ந்து, கலை உலகில் இருந்து கொண்டு, தன் சுய உழைப்பால் கிடைத்ததையெல்லாம் மக்களுக்கு வாரி வாரி வழங்கினார். தான் நடித்த படத்தின் பாடல்களின் மூலம், கதைகளின் மூலம், வசனங்களின் மூலம், நல்ல விஷயங்களையே பேசி, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இருந்தாலும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நேர்மையின் சித்தாந்தத்தை எல்லா மக்களுக்கும் புரியும் வண்ணம், நடித்து, அப்படியே வாழ்ந்து, பார் வியக்கும் வண்ணம் பத்தாண்டுகாலம் மக்களாட்சி கொடுத்தார். அவர் கொடுத்து, கொடுத்து வாழ்ந்த விதம் நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.. அப்படி கொடுத்தவரது பள்ளியில் வந்து உங்களை சந்தித்து உரையாட கிடைத்த வாய்ப்புக்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இங்கு திரளாக கூடியிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், எம்.ஜி.ஆரது நண்பர்களுக்கும், இந்த பள்ளியை சிறப்பாக நிர்வகிக்கும் அவர்தம் குடும்பத்தார்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் மற்றும் எம்.ஜி.ஆரின் உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

தன்னம்பிக்கை – மனதைரியம்

மாணவ நண்பர்களே, நமது வாழ்வில் தன்னம்பிக்கை மிக்க அவசியம். தன்னம்பிக்கை வெற்றியின் முதல் படி. அதற்கு ஓரு சம்பவத்தை கூறி விளக்குகிறேன். நான் குடியரசுத்தலைவராக இருந்த பொழது, நடந்த 2 சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 27th November 2003 அன்று, கிட்டத்தட்ட மாற்றுத்திறன் படைத்த 1000 மாணவர்களை சந்தித்தேன். அவர்கள் அனைவரும் அபிலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள். அவர்கள் குடியரசுத்தலைவர் மாளிகையை பார்க்க மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

அவர்கள் மத்தியில் நான் ஒரு கவிதை எழுதி, அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அந்த கவிதை, இது தான்.

நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்,
எங்களது மனம், வைரத்தைக் காட்டிலும் பலமானது,
எங்களது தன்னம்பிக்கையால், எப்போதும் வெற்றி பெறுவோம், வெற்றி பெறுவோம்.
கடவுள் எங்களோடு இருக்கும் போது, எங்களுக்கு எதிரி என்று யாரும் இல்லை.

இதைக் கேட்டவுடன், ஈரான் நாட்டை சேர்ந்த முஸ்தபா என்ற ஒரு மாணவன், என்னிடம் வந்தான், அவனுக்கு இரண்டு கால்களும் இல்லை, செயற்க்கை கால்கள் பொருத்தப்பட்டிருந்தது. என்னிடம் வந்து ஒரு பேப்பரை என் கையில் திணித்தான். அதில் ஒரு அழகான கவிதை எழுதி இருந்தது. அதன் தலைப்பு என்ன தெரியுமா, அதுதான் “மன தைரியம்”.

“மன தைரியம்”.
எனக்கு கால்கள் இரண்டும் இல்லை,
அழாதே, அழாதே என்று என் மனசாட்சி சொல்கிறது.
ஆம், என் மனசாட்சி சொல்கிறது,
நீ மன்னன் முன்பாக கூட, மண்டியிட்டு வணங்க வேண்டியது இல்லை மகனே என்று.
நான் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டுவேன்.

என்ன ஓரு மன உறுதி, தனது இரண்டு கால்களையும் இழந்த பின்பும், என்ன ஓரு தன்னம்பிக்கை, அப்படிப்பட்ட தன்னம்பிக்கையை நாம் இந்த மண்ணில் பிறந்த ஓவ்வொரு குழந்தைக்கும் ஊட்டி வளர்க்க வேண்டும்.

நான் யாராக இருந்தாலும் பரவாயில்லை

இன்னொரு முறை, குடியரசுத்தலைவர் மாளிகையில் ஹைதராபாத்தைச் மலைவாழ் பகுதியை சேர்ந்த 100 மாணவர்களை சந்தித்தேன். அவர்களிடம் யார் யாரெல்லாம் டாக்டராக, என்ஜினியராக, IAS, IPS officers ஆக, ஆசிரியர்களாக, தொழில் முனைவோராக போகிறீர்கள் என்று கேட்டேன். ஒவ்வொருவரும் தங்களது விருப்பத்தை சொன்னார்கள். அந்த மாணவர்கள் மத்தியில், 9ம் வகுப்பு படிக்கும் பார்வையற்ற ஒரு மாணவன் கையை தூக்கினான். அவன் பெயர் ஸ்ரீகாந்த். அவன் சொன்னான், சார் எனது ஆசை, நான் ஒரு நாள் இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசு தலைவராக ஆவேன் என்று கூறினான். நான் அவனுக்கு வாழ்த்து தெரிவித்து, அவனது எண்ணம் பெரிதாக இருந்தது. அந்த எண்ணத்தை அடைய கடுமையாக உழைக்கவும், அறிவை தேடிப்பெறவும், தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து விடா முயற்சியுடன் உழைக்கவும் சொல்லி என் வாழ்த்தை தெரிவித்தேன்.

அதற்குப்பின்பு, அவன் 10ம் வகுப்பில் 91% மதிப்பெண்களும், 12ம் வகுப்பில் 99% மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றான். அவனுக்கு ஒரு கனவு, அதாவது அமெரிக்காவில் உள்ள MIT, Boston ல் சென்று இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தான். இதுவரை MIT, Boston மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி அளிக்க வில்லை. அவன் சிறப்பு அனுமதி பெற்று, தகுதித்திறன் தேர்வு எழுதுகிறேன், தேர்வு பெற்றால் எனக்கு அனுமதி கொடுங்கள், என்று விண்ணப்பித்தான். அவன் போட்டி போட்டது, பல் வேறு நாட்டில் இருந்து தகுதித்தேர்வு எழுதிய அனைத்து திறனும் கொண்ட மாணவர்களுடன், பார்வையற்ற மாணவனாக போட்டியிட்டான். அந்த உலகளாவிய தகுதித்தேர்வில் 4 வது மாணவனாக தேர்வு பெற்றான். MIT, Boston அவனுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இன்ஜினியரிங் படிக்க அனுமதி அளித்தது. எப்படிப்பட்ட மனோதிடம் ஸ்ரீகாந்த் இருந்தால். பார்வையின்மை ஒரு குறையாக அவனது சாதனை உள்ளத்திற்கு தடைகல்லாக இருக்க வில்லை, தடையை தனது மனோதிடத்தால் உடைத்தெரிந்தான், வெற்றி பெற்றான். அவனை General Electrical Company தான் அமெரிக்காவிற்கு அனுப்ப உதவியது, அந்த கம்பெனி CEO அவனுக்கு ஒரு இமெயில் அனுப்பி, நீ படித்து முடித்து திரும்பியஉடன் உனக்கு General Electrical Companyயில் வேலை தயாராக இருக்கிறது என்று கூறினார். அதற்கு அவன் நன்றி தெரிவித்து அனுப்பிய இமெயில் குறிப்பிட்டிருந்தான், ஒரு வேளை நான் இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத்தலைவராக முடியவில்லை என்றால் கண்டிப்பாக உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வேன் என்று கூறினான். எப்படிப்பட்ட தன்னம்பிக்கை அவனுக்கு. இந்த சம்பவங்களில் இருந்து நமக்கு விளங்குவது என்ன.

நீங்கள் எல்லோரும் நான் சொல்வதை என்னுடன் திருப்பி சொல்கிறீர்களா,
அதாவது,

நான் யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நான் எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்,
என் உழைப்பால், தன்னம்பிக்கையால் நான் எண்ணுவது
என்னை வந்து சேரும்.

நான் பறந்து கொண்டேயிருப்பேன்

நண்பர்களே, உங்களை எல்லாம் பார்க்கும் போது, வாழ்க்கையில் வெற்றி பெற நான்கு செயல்கள் அவசியம். அதாவது,

1. வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் வேண்டும், ,

2. அந்த லட்சியத்தை அடைய அறிவாற்றலை தொடர்ந்து பெருக்க வேண்டும் – நல்ல புத்தகங்கள், சான்றோர்களாலும், நல்ல ஆசிரியர்களாலும்.

3. கடின உழைப்பு வேண்டும்

4. விடா முயற்சி வேண்டும் – அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும்

இந்த நான்கு செயல்களை செயல் படுத்தினால் நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றியடைவீர்கள். நான் எழுதிய கவிதையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் பறந்து கொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்

நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க

நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும்.

என்று சொன்னேன். அதை திருப்பி சொன்னவுடன், அவன் கண்களில் ஆனந்த கண்ணீரைப் பார்த்தேன். அவனுக்குள் ஒரு நம்பிக்கையின் ஒளி பிரகாசிப்பதை உணரந்தேன். அவன் சொன்னான், சார் எனக்கு நம்பிக்கை வந்து விட்டது, நம்பிக்கை வந்து விட்டது, என்னால் முடியும், என்னால் முடியும், நான் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெருவேன், வெற்றி பெருவேன் என்று கூறிக்கொண்டே, மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது இருப்பிடத்திற்கு ஒடினான். அப்பொழுது எனக்கு ஏற்பட்ட சந்தோஷசத்திற்கு அளவில்லை. அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரது கண்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஒடியது. கைதட்டி அந்த மாணவனை ஊக்குவித்தார்கள்.

இந்த இரண்டு கேள்வியிலும் இருந்து நமக்கு விளங்குவது என்ன, நமது கல்வி பயிற்று விக்கும் முறை மாணவர்களின் கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பதாகவும், சிந்திக்கும் திறனை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, மாணவர்கள் சுலபமாக பாடங்களை படிப்பதற்கு ஏதுவான வகையில் பாடங்களை நடத்த வேண்டும். அவர்களது கற்றல் ஒரு இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனிடமும் ஒரு தனித்திறமை உள்ளது. அந்த தனித்திறமையை ஆசிரியர்கள் கண்டுணர்ந்து, அதை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி, அந்த மாணவனை அவனது தனித் திறமையை வளர்க்கும் விதத்தில் ஊக்கு விக்க வேண்டும்.

ஆசிரிய நண்பர்களே, ஒவ்வொரு மாணவனையும், ஒரு தனித்துவமானவனாக ஆக்கும் திறமை உங்களிடம் இருக்க வேண்டும். நான் பல மாணவர்களின் கூட்டத்தில் நீ எவ்வாறு தனி்த்துவமானவனாக இருக்க முடியும் என்று சில உதாரணங்களுடன் விளக்கினேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நீ தனித்துவமானவன்.

தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு வருகிறார் தாமஸ் ஆல்வா எடிசன், தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள், நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியை பார்க்கும் போது அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நம் மனதின் அருகாமையில் தோன்றுகிறார், ஏன் கடலும் அடிவானமும் நீல நிறமாக இருக்கிறது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை, ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும் போது ஒரு விஞ்ஞானிக்கு அந்த கேள்வி வந்தது, அந்த கேள்விக்கான பதில்தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான் சர்.சி.வி. ராமனுக்கு ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது, இந்த நூற்றாண்டில் அகிம்சா தர்மம் என்ற கத்தியில்லா, இரத்தமில்லா ஆயுதத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று உலகிற்கே அகிம்சா தர்மத்தை போதித்தவர் மகாத்தமா காந்தியடிகள்.

ஆக ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, அப்படித்தான் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மாணவனின் பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது ஆசிரியர்களாகிய உங்கள் கைகளில் தான் உள்ளது.

ஒவ்வொரு மாணவர்களும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது, ஏனென்று தெரியுமா, ஒவ்வொரு மாணவர்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் மாணவர்களை விழ விட மாட்டேன், ஒவ்வொரு மாணவனும் தனித்துவமானவன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் அந்த மாணவர்களின் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். அப்படி பட்ட நல்ல பணியை நீங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட உணர்வுள்ள ஆசிரியர்கள்தான் தமிழ்நாட்டின் ஆசிரியப்பெருமக்கள் ஆகிய நீங்கள் ஆவீர்கள். உங்களது பணிதான் வரலாற்றின் பக்கங்களை உருவாக்கும் நாளைய மாணவர்களை உருவாக்கும் ஓர் உன்னதமான பணியாகும்.

மன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழச்சியுறவேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்த்த் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர். உங்களது நல்லாசிரியர் பணி இதற்கு அடிப்படையாக வாழ்த்துகிறேன்.

முடிவுரை

எதிர்பாராத விஷயங்களை எதிர்பார்க்கக் கற்றுக் கொள்வதுதான் உங்களை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தும். சற்றும் எதிர்பாராத விஷயங்கள் எதிர்ப்படுவதே எதார்த்தம்.

வெற்றி என்பது இறுதிப்புள்ளி….
தோல்விகள் என்பவை இடைப்புள்ளிகள்….
இடைப்புள்ளிகள் துணையின்றி
இறுதிப்புள்ளியை அடைதல் சாத்தியமில்லை…

வெற்றியைக் கொண்டாட மறந்தாலும், தோல்விகளை கொண்டாட கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், தோல்விகள்தான் நம்மை வலுப்பெறச் செய்பவை, நம் பயணத்தை முழுமை பெறச்செய்பவை.
திருவள்ளுவர் சொன்னது போல்

இடும்பைக்கு இடும்பை படுப்பர், இடும்பைக்கு
இடும்பை படா தவர்.

எனவே தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து, வெற்றி
எனவே பெற்றோர்களும், ஆசிரியர்களும், இந்த சம்பவங்களில் இருந்து கற்றுக்கொள்வது என்னவென்றால், உங்கள் குழந்தைகள் ஒவ்வொரு நல்ல செயல்களையோ, சாதனைகளையோ செய்தார்கள் என்றால் அவர்களுக்கு நீங்கள் பரிசளிப்பது புத்தகமாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.

நான்கு திசைகளின் குறிப்பிட்ட புள்ளிகளுக்குள்
அடைந்து போனவையல்ல, உங்களின் எல்லைகள்…
எவ்வளவு தொலைவும் உங்களால் பயணிக்க இயலும்.
ஆம் எவ்வளவு தொலைவும் உங்களால் பயணிக்க இயலும். அந்த நம்பிக்கையுடன் முன்னேறவேண்டும்.

Hence dear friends, உறக்கத்திலே வருவதல்ல கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. எனவே நண்பர்களை, நீங்கள் அனைவரும் எம். ஜி.ஆர் அவர்களின் கனவை நனவாக்க வேண்டும்.

செவித்திறன் குறைவுள்ள மாணவர்களுக்கான ஆசிரியர்களின் பணி, ஒரு தெய்வீகப்பணியாகும். உங்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். உங்களுடன் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது காக்லியர் இம்பிளாண்ட் என்ற கருவியை குழந்தைகளுக்கு பொருத்தினால் அவர்கள் சாதாரணமாக கேட்க, பேச வேண்டிய திறமையை உருவாக்கலாம். இன்றைக்கு இந்த காதுக்கருவியின் விலை, 8 லட்சத்திற்கு வெளிநாட்டில் இருந்து வாங்கப்படுகிறது. நம் நாட்டிலேயே இதை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பு மற்றும் ஆராய்சி துறையின் மூலமாக உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இது இந்த கருவி உபயோகத்திற்கு வந்து விடும். இதன் விலை ரூ 50,000க்குள் வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியின் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களது கனவை நனவாக்க உழைக்கும் உங்கள் அனைவருக்கும், ஒர் நல்ல சமுதாயத்தை, அறிவார்ந்த சமுதாயத்தை எம்.ஜி.ஆரின் கருத்துக்கள் மூலமாக உருவாக்கும் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நன்றி, வணக்கம்.

உங்களுக்கு இறை ஆசிகள் உண்டாவதாக.

By, Dr. APJ Abdulkalam

Leave a comment